சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாரத சாரணியர் இயக்க அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியேற்றினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் ஜி20 கல்வி கருத்தரங்கில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ளும் போது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் ஆட்சேபனைகள் குறித்து அவரிடம் தெரிவிக்கப்படும். அதோடு முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக கட்டிடம் திறக்கப்படும் என்று கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திமுக அரசுக்கு கிடைக்குமா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதி சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப் படாமல் இருப்பதாகவும் மற்றபடி தேர்தல் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றும் கூறினார். அதோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஆதரவும் திமுகவுக்கு தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் பயிற்றுனர்கள் சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.