நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் செயலுக்கு கொண்டு வந்திருக்கிறது. தெலங்கானாவில் நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்பகுதியிலுள்ள அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி முன்பே வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியானது ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில்அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை(ஓபிஎஸ்) நடைமுறைபடுத்துவோம் என ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்குறுதி கொடுத்துள்ளார். மனிதாபிமான அணுகு முறையை கடைப்பிடித்து மாநிலத்தில் 1.36 லட்சம் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் கீழ் பலன்களை கொண்டு வந்திருப்பதாக ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.

தங்களது கட்சி ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அம்மாநில கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்ரே போன்றோர் தெலுங்கானா தொழிலாளர்களிடம் உறுதியளித்து இருப்பதாக ஹிமாச்சலப்பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.