நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசானது அகவிலைப்படியை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசை தொடர்ந்து பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கினர்.

இதையடுத்து இமாச்சலபிரதேச அரசு மாநில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை(DA) 3% உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இவர்களை அடுத்து அசாமிலும் அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதை மற்ற மாநிலங்களை போன்றே ஜனவரி 1-ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கவுள்ளது. சமீபத்தில் கோவா அரசும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.

அந்த வரிசையில் தமிழகம் எப்போது இணையும் என அரசு ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் அதற்கான அறிவிப்பு வருவதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இருப்பினும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2-ஆம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தமிழகத்தில் ஒரு தடவையேனும் அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு விடுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.