தமிழக வெற்றிக்கழகம் கட்சியை 2024 பிப்ரவரியில் நடிகர் விஜய் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், விஜய் தலைமையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கிய இந்த மாநாடு இரவு 7.25 மணி வரை நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் நேற்று இரவு முதலே மதுரையில் குவிந்தனர். விடியற்காலையில் மாநாட்டு மேடை முன் தொண்டர்கள்திரண்டனர்.
10 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ள இந்த மாநாட்டில் உற்சாகமாக பல லட்சம் பேர் பங்கேற்றனர். இதனிடையே, விஜய்யின் அரசியல் வருகை குறித்து இயக்குநர் டி. ராஜேந்தரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கண்கலங்கியபடி, “விஜய் என் நண்பர். மறைந்த விஜயகாந்துடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது.
ஆனால், அரசியல் காரணமாக எங்கள் நட்பு பாதிக்கப்பட்டது. என் மகன் சிலம்பரசன் மூலம் மீண்டும் இணைந்தோம். அரசியலுக்காக திரையுலக நட்பை இழக்க விரும்பவில்லை. அது ரஜினியாகவோ, கமலாகவோ, விஜய்யாகவோ இருந்தாலும் சரி,” என்று உருக்கமாக தெரிவித்தார்.
