நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் த.வெ.க தலைவர் விஜய் குறித்து கூறியிருந்தார். அவர் கூறியதாவது, சமீபத்தில் அரசியலில் நுழைந்துள்ள சகோதரர் விஜய் அவர்கள் அரசியல் பயணத்தில் நெடுந்தூரம் செல்ல வேண்டும். பலவற்றை அவர் பார்க்க வேண்டும். அரசியலில் தினந்தோறும் ஒரு பாடம் கற்றுக்கொண்டே தான் ஆக வேண்டும். மக்கள் மூலமாக தொண்டர்கள் மூலமாக அரசியல் கட்சிகள் மூலமாக புதுப்புது அனுபவங்களை பெற வேண்டும். விஜயும் இந்தப் பாதையில் கட்டாயம் சென்று தான் ஆக வேண்டும்.

அவர் சினிமா துறையில் மிகப்பெரிய சாதனை படைத்துவிட்டு இப்பொழுது அரசியலுக்கு வந்துள்ளார்.அரசியலில் நுழைந்தவுடன் எல்லாருக்கும் எல்லாமே தெரியாது கற்றுக் கொண்டே தான் இருக்க வேண்டும். எங்களின் பாதை வேறானது நாங்கள் சமூக மாற்றத்தை, அரசியல் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கிறோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களது கட்சி வலிமையான கூட்டணியுடன் வெற்றி பெறும். மக்கள் எங்களை நிச்சயமாக ஆட்சிக்கு அழைத்து வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.