ஆசியாவில் கிரிக்கெட் நிர்வாகம் முழுமையாக அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் அதிகாரி சையத் அஷ்ரபுல் ஹக் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிகளைப் புறக்கணிக்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது.

இந்தச் சூழலில், விளையாட்டைப் புரியாத அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகளால் கிரிக்கெட் அதன் தன்மையை இழந்து வருவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்பு கிரிக்கெட் வாரியங்களில் இருந்த தலைவர்கள் விளையாட்டின் நுணுக்கங்களையும் அதன் தாக்கங்களையும் நன்கு அறிந்திருந்தனர் என்றும், ஆனால் தற்போது ஒருமுறை கூட பேட் பிடிக்காதவர்கள் அதிகாரத்தில் இருப்பதே இதற்குப் பின்னடைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் வங்கதேச விளையாட்டு ஆலோசகர்களின் செயல்பாடுகள் முதிர்ச்சியற்றதாக இருப்பதாகவும், இது போன்ற சர்வதேசப் போட்டிகளைப் புறக்கணிப்பது ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளைப் போலச் சாதாரணமானது அல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக மத உணர்வுகளையும் விளையாட்டு அரசியலையும் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத் தேர்தல்களை மனதில் வைத்தே இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுவதாகக் கூறியுள்ள அவர், இது போன்ற அரசியல் தலையீடுகளால் வங்கதேச வீரர்களின் எதிர்காலமும், சர்வதேச கிரிக்கெட்டின் மதிப்பும் கேள்விக்குறியாகி வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.