தமிழக அரசியல் களத்தில் நான்கு முனைப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து தான் முன்வைத்த விமர்சனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்களுக்கு இயக்குநர் சேரன் விரிவான விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்த இயக்குநர் சேரன், த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சித்திருந்தார். “மேடைகளில் வெறும் வீரவசனம் பேசாமல், உங்களுடைய கொள்கைகள் குறித்து மக்களிடம் பிரசாரத்தில் பேசுங்கள்” என அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சேரனை விமர்சித்தும் பதிவிட்டிருந்தனர்.

இந்த தன்னை விமர்சித்த விஜய் ரசிகர்களைக் குறிப்பிட்டு இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள புதிய பதிவில் கூறியிருப்பதாவது: நானும் விஜய்யை ரசித்தவன்தான். திரைத்துறையில் அவர் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அரசியல் என்று வரும்போது அதை நாம் பல கோணங்களில் சிந்தித்து கையாள வேண்டியிருக்கிறது. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல; அது மக்களின் வாழ்க்கை. மக்கள் அறியாமையில் ஒருவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்துகொண்டால், அதன் பாதிப்பு நமக்கே வந்து சேரும்.

ஒரு கருத்தை முன்வைத்தவரை ஆபாச வார்த்தைகளால் பேசி முடக்கிவிடலாம் என்று நினைப்பது, உங்களின் அரசியல் அறிவின்மையையே காட்டுகிறது. இத்தகைய செயல்கள் உங்கள் தலைவரைப் பற்றி மக்கள் மத்தியில் தவறான பிம்பத்தையே உருவாக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மேலும் தனது பதிவில், “நல்ல விஷயங்களைப் பகிர நினைப்பவனும், அடுத்த தலைமுறையைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் உங்களின் தகாத பேச்சுகளுக்கெல்லாம் அஞ்சமாட்டான். தம்பிகளாகிய நீங்கள் பேசுங்கள், நான் உங்கள் குடும்பத்தில் ஒரு மூத்தவன் போன்றவன். காலம் கடந்து நீங்கள் உங்கள் குடும்பத்துடன் இருக்கும்போது, இந்த அண்ணன் சொன்னதன் அர்த்தம் உங்களுக்குப் புரியும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில், திரையுலகைச் சேர்ந்த ஒருவரே சக திரைக்கலைஞரின் அரசியல் வருகை குறித்துத் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.