திருச்சி மாவட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு கோபிநாத் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கோபிநாத் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு விவசாய வேலை பார்த்து வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலசுப்பிரமணி இறந்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் இருக்கும் வயலில் உள்ள வீட்டு வாசல் முன்பு படுத்து தூங்கினார்.

நேற்று காலை எரிந்த நிலையில் கோபிநாத் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபிநாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது கோபிநாத்தின் தாய் செல்விக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பாயிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது.

அந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்து முன் பணமாக கோபிநாத் 9 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். அந்த பணத்தை மது குடித்தும், தேவையில்லாத செலவுகள் செய்தும் வீணடித்தார்.

இதனால் கோபிநாத்துக்கும், செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதில் கோபமடைந்த செல்வி கோடரியால் தனது மகனின் கழுத்தில் தாக்கியுள்ளார். பிறகு மண்ணெண்ணையை ஊற்றி கோபிநாத்தை எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனால் போலீசார் செல்வியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.