
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் தற்போது வரை ஓயவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பல பிரிவுகளாக அதிமுக தலைவர்கள் பிரிந்துள்ளனர். இதனால் வாக்குகள் பிரிந்து தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை அதிமுக பெற்று வருகின்றது. இப்படியான நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் மீண்டும் அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது சமீபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவை புறக்கணித்தார்.
இப்படியான நிலையில் சத்தியமங்கலம் அருகே எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தில் வரும் எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும் என்ற வசனத்தை மேற்கோள் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நான் செல்கின்ற பாதை எம்ஜிஆர் மற்றும் அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் நான் மயங்கவில்லை. எம்ஜிஆருக்கு வந்த சோதனைகள் யாருக்குமே வந்து இருக்காது. கடையேழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர் தான். என்னை வாழ வைத்த தெய்வங்கள் ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் தான். அம்மா விரலை நீட்டும் போதே அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார் என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது என்று பேசியுள்ளார்.