ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் கோபியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க மாநில விளையாட்டு அணி செயலாளருமான தயாநிதி மாறன், மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 5.6 சதவீதமாக உள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய சான்றிதழ்.

பாஜக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது. அவர்களுக்கு அடிமையாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கும் மாநில உரிமைகளுக்கும் துரோகம் இழைத்து வருகிறார். கடந்த தேர்தலில் துரோகத்திற்கும் குறுக்கு வழிக்கும் இடமில்லை என்பதைத் தமிழக மக்கள் நிரூபித்து, மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்கினார்கள்.

இன்று அரசியலுக்குப் புதிதாக வந்துள்ள ஒருவர் (விஜய்) மீது இளைஞர்கள் மோகத்தில் உள்ளனர். இளைஞர்கள் தங்கள் தாய்மார்களின் பேச்சைக் கேட்க வேண்டும். “அவரது படத்தைப் பாருங்கள், விசில் அடியுங்கள்; ஆனால் வாக்குகளை மட்டும் தி.மு.க-விற்கே போடுங்கள்” என்று தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகையைத் தடுக்கப் பார்த்தவர்களுக்குச் சவுக்கடி கொடுக்கும் வகையில், ரூ.1,000 திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியவர் நமது முதலமைச்சர். அடுத்த முறை ஆட்சிக்கு வந்ததும் இந்தத் தொகை ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், ரூ.16,000 மதிப்புள்ள கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழகம் திகழ்கிறது.

நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. தேவைப்பட்டால் மொழிகளைக் கற்றுக் கொள்வோம், ஆனால் திணிக்காதீர்கள் என்றே கூறுகிறோம். ஒரு மொழியை அழிப்பதன் மூலம் அந்த மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க முடியும். உதாரணமாக, ராஜஸ்தானில் சுதந்திரத்தின் போது 97 சதவீதமாக இருந்த தாய்மொழிப் பயன்பாடு, இன்று இந்தி திணிப்பால் வெறும் 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இத்தகைய நிலை தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது. எனவே, வரும் தேர்தலிலும் உங்கள் ஒற்றை வாக்கின் மூலம் மீண்டும் தி.மு.க ஆட்சியை மலரச் செய்ய வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.