மருத்துவ நுழைவு தேர்வான நீட்-க்கு தயாராகியிருந்த இரு மாணவர்கள் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் தற்கொலை செய்த சம்பவம், மாணவர்கள் மீதான கல்விச் சுமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பலகாட் மாவட்டத்தைச் சேர்ந்த குவாஹிஷ் தேவ்ராம் நாகரே (வயது 16), நாக்பூரில் உள்ள “பிசிக்ஸ் வாலா” கோசிங் மையத்தில் பயின்று வந்தார். அவர் அம்பஜாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் விடுதியில் தங்கி இருந்தார்.

புதன்கிழமை காலை, அவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டார். அருகில் இருந்த குறிப்பு ஒன்றில், “மன்னிச்சுங்க அப்பா அம்மா, என்னால் முடியல…” என எழுதியிருந்தது. இந்த வார்த்தைகள் பெற்றோர் மனதை வேதனையால் உருக்கி விட்டன.

அதே நாளில், வைதேஹி அனில் உய்கே (வயது 17) என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். அவரும் நாக்பூரில் வேறு பகுதியில் தங்கி, நீட் தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இது ஹிங்க்ணா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியாகும். போலீசார் இந்த இரு சம்பவத்தையும் தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளனர்.

இருவரும் ஒரே நாளில், ஒரே நோக்கத்துக்காக உயிரை மாய்த்த செய்தி, பெற்றோர், ஆசிரியர்கள், சமூக வட்டாரங்களின் உள்ளங்களை கலங்கடித்துள்ளது. மாணவர்களின் மனநலத்தின் மீது நாம் செலுத்தும் கவனம் பற்றிய பெரும் கேள்வியை இது எழுப்பியுள்ளது.