முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் தன்னை அப்பா, அப்பா என்று அழைப்பதாக கூறிய நிலையில் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்திருந்தார். அதாவது யார் யாருக்கு அப்பா.? மற்றொருவரை அப்பா என்று அழைத்தால் இங்கு அதன் அர்த்தமே வேறு. மானமுள்ள சூடு சொரணை உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அதை நீ சொல்லக் கூடாது மக்கள் தான் சொல்ல வேண்டும். இதற்காக என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை. செல்போனில் செல்பி எடுப்பது மற்றும் போட்டோ ஷூட் நடத்துவது மட்டும்தான் தமிழக முதல்வரின் முழு நேர வேலை என்று கூறினார். சிவி சண்முகம் முதல்வர் ஸ்டாலினை மோசமான வார்த்தைகளால் விமர்சித்தது சர்ச்சையாக மாறிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
”மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்” என நிதானம் இல்லாமல் உளறியிருக்கிறார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா, சசிகலா, பழனிசாமி என காலத்திற்கு ஏற்றார் போல போற்றி பாடுவதற்காகவே தன் வாயை வாடகைக்கு விடுபவர்தான் சி.வி.சண்முகம்.
’’அம்மா… அம்மா..’’ என அம்மையார் ஜெயலலிதா இருக்கும் போது உருகிய சண்முகத்தின் நாக்கு, ஜெயலலிதா இறந்த பிறகு ’’சின்னம்மா இல்ல…எங்க அம்மா’’ என சசிகலாவையே அம்மா ஸ்தானத்தில் வைத்தார். அம்மாவை மாற்றியவர் எல்லாம் அப்பாவை பற்றி பேச அருகதை இருக்கிறதா? அவமானப்படுவது அரிய கலை. அது சண்முகத்திற்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது.
மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண், குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி, முதியோர்களுக்கு வீடு தேடி மருத்துவம் என அனைத்து வயது பெண்களும் பலன் பெறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. குறிப்பாக உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கையும் பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதை பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் கூடும் பெண்கள் அவரைப் பார்த்து ’’நன்றி அப்பா’’ என உருகுகிறார்கள். அதனைதான் உங்களில் ஒருவன் கேள்வி பதிலில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டுப் பெண்கள் தலைநிமிர்வது அதிமுகவுக்கு உறுத்துகிறது போல. அந்த பெண்கள் அப்பா என முதலமைச்சரை அழைப்பது அடிவயிற்றில் எரிகிறது போல.அதனால்தான், அறுவறுக்கதக்க நாராச மொழியில் பேசியிருக்கிறார் சி.வி.சண்முகம். குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுனு ஒரு பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
