ஆந்திர மாநிலம் ஆட்ரா மாவட்டம் ஆத்மகூர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் குளத்தில் வித்தியாசமான காட்சியை மக்கள் பார்க்க நேரிட்டது. கபெலா தெருவில், வெள்ளம் தேங்கி ஏற்பட்ட குளத்தில் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட மஞ்சள் நிற தவளைகள் குதித்தாடி, குரல் எழுப்பி உள்ளன.

இந்த வண்ணமயமான காட்சியால் பொதுமக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்த தவளைகள் எல்லாம் இந்திய புல் தவளைகள் (Indian Bullfrogs) என்பது சூழலியல் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய உருவமுள்ள தவளைகளில்  ஒன்றாகும்.

சாதாரணமாகவே ஏரிகள், வயல்கள், மண்ணுக்குள் ஈரப்பதம் உள்ள இடங்களில் வாழும் இந்த தவளைகள், மழைக்கால இனப்பெருக்க பருவத்தில், ஆண்தவளைகள் மஞ்சள் நிறமாக மாறி  குரல் எழுப்பி, பெண் தவளைகளை ஈர்க்கும். இதில் தங்கள் இனத்தை நிலைநிறுத்தவும், போட்டியாளர்களை விரட்டவும் இந்நிற மாற்றம் ஏற்படுகிறது என்பது விஞ்ஞான ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த வகை தவளைகள் 6.5 இன்ச் அளவிற்கு வளரக்கூடியவை. கிராமப்புற மற்றும் வேளாண் சூழல்களில் இது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஏனெனில், இவை புழுக்கள், சிறிய பாம்புகள், எலி வகைகள், மற்றும் சில சிறிய பறவைகளையும் பிடித்து உண்ணும் திறன் கொண்டவை. எனவே, இவை வேளாண் பயிர்களுக்கு பாதுகாவலர்களாக பார்க்கப்படுகின்றன.