அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட பிரிவில் கடந்த மார்ச் மாதம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களில் பற்கள் பிடுங்கி சித்திரவதை செய்ததாக அப்போது புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமதுசபீர் ஆலம், மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணிபுரிந்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங் பணியிட நீக்கம் செய்யப்பட்டார்..

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிபிசிஐடியினர்  4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் காவல்துறை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்ட 15 பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் இன்று பெறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டதற்கு முகாந்திரம் இருப்பதாக 17 பேர் மீதும் குற்ற பத்திரிகை இருந்ததால் இவர்கள் இன்று நேரடியாக நெல்லை நீதிமன்றத்தில் காலை 10:40 மணியளவில் ஆஜரானார்கள்.

இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஜாமீன்தாரர்கள் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு ஜாமினை நெல்லை குற்றவியல் நீதிபதி பிரிவேனி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் கொடுக்கப்பட்டது.