
தமிழகத்தில் கடந்த வருடம் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் புயலினால் விழுப்புரம் உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இரவேல்பட்டு கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி வனத்துறை அமைச்சர் பொன்முடி பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த சிலர் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதோடு தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அமைச்சர் மீது சேறு வீசிய விஜய ராணி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை காவல்துறையினர் சமீபத்தில் கைது செய்த நிலையில் தற்போது விஜய ராணியையும் கைது செய்துள்ளனர். மேலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணை தலைவி விஜய ராணியை திருவெண்ணெய் நல்லூர் போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.