அமெரிக்கா செல்ல விரும்பும் அகதிகள் மெக்சிகோ வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மெக்சிகோ எல்லை பகுதியில் தீவிர சோதனைக்கு பிறகு தான் வாகனங்கள் அனுமதிக்கப்படும். முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மற்றும் நபர்களுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை. இதனால் பலரும் சட்டத்திற்கு புறம்பாக சரக்கு ரயில் மற்றும் லாரிகளில் அமெரிக்க எல்லைக்குள் வர முயற்சிப்பார்கள்.

சில நேரம் சேதமடைந்த பேருந்துகளை வாடகைக்கு எடுத்து அதில் பயணம் செய்வார்கள். இது ஆபத்தான பயணம் ஆகவே இருக்கும். அப்படி மிகவும் மோசமான நிலையில் இருந்த ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்த வெனிசுலா மற்றும் ஹைதி நாட்டை சேர்த்த 50-க்கும் மேற்பட்ட அகதிகள் அதில் பயணித்து அமெரிக்கா சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்து தெற்கு மாகாணமான ஆக்ஷாக்காரன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்ட நிலையில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் காயமடைந்த 29 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மெக்சிகோ குடியேற்ற நிறுவன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.