அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா ஈரானுக்கு வழங்கி வரும் மறைமுக ஆதரவு அமெரிக்காவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அடியாக மாறியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் ‘C430L’ என்ற ரகசியக் குறியீட்டுத் திட்டத்தின் கீழ், மீயொலிவேகப் பயண (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகளை உருவாக்குவதில் ஈரானுக்கு ரஷ்யா உதவி வருகிறது. ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் போர் தொடங்கிய பின்னரும் இந்த ரகசியத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்த மீயொலிவேகப் பயண ஏவுகணைகள் அதிவேகமாகப் பாயக்கூடியவை என்பதால், சாதாரண ரேடார்களால் கூட இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். அமெரிக்காவின் அதிநவீன போர்க்கப்பல்களைத் தகர்க்கும் திறன் கொண்ட இத்தகைய ஏவுகணைகளைச் சொந்தமாக்க வேண்டும் என்பது ஈரானின் நீண்டகாலக் கனவாக இருந்தது, அது தற்போது ரஷ்யாவின் உதவியால் நனவாகியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஏற்கனவே பொருளாதாரத் தடைகள் காரணமாகப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ரஷ்யாவின் இந்த உதவி ஈரானின் ராணுவப் பலத்தை மடங்காக உயர்த்தியுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மீது ஈரான் எந்த நேரத்திலும் கடுமையான தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

அமெரிக்கா-ஈரான் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என அமெரிக்கா கணித்திருந்த போதிலும், ரஷ்யாவின் ஆதரவால் இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. மேலும், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதாலும், போர் தீவிரமடைந்து வருவதாலும் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.