ஒரு காலத்தில் தொழில்நுட்பத் துறையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு முன்னணி இந்திய-அமெரிக்க சிஇஓ-வின் பேச்சு தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீனி மடாலா என்ற அந்த தொழிலதிபர், 1986-ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா சென்று, அங்குள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, ‘சாஃப்ட்சால்’ (SoftSol) என்ற பெரிய ஐடி நிறுவனத்தையும், மூன்று புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் தொடங்கி பெரும் சாதனை படைத்தவர்.
அந்தத் தொடக்கக் காலத்தில், சிலிக்கான் வேலி நிறுவனங்களின் உயர்மட்டக் கூட்டங்களில் பங்கெடுக்கும் ஒரே இந்திய முகமாக அவர்தான் இருந்தார். ஆனால் அவரே இப்போது, “எனக்கு இப்போது 25 வயது என்று வைத்துக்கொண்டால், அதே வாய்ப்புகள் கிடைத்தாலும் நான் நிச்சயம் அமெரிக்காவுக்கு வரமாட்டேன்” என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் தொழில்முனைவோரின் சிந்தனை எந்தளவுக்கு மாறியிருக்கிறது என்பதை இவருடைய இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. கடந்த நூற்றாண்டின் இறுதியில், புதிய தொழில்நுட்பங்களையும், தொழிலுக்கான முதலீடுகளையும் பெறுவதற்கு வெளிநாடு செல்வது மட்டும்தான் ஒரே வழியாக இருந்தது.
ஆனால் இன்று இந்தியாவிலேயே பிரம்மாண்டமான தொழில்நுட்ப மையங்களும், வலுவான டிஜிட்டல் பொருளாதாரமும், துரிதமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் சூழலும் உருவாகிவிட்டன. இதுமட்டுமில்லாமல், அமெரிக்காவில் கடுமையான விசா விதிமுறைகள், சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் எகிறி வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அச்சம் போன்ற காரணங்களால், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரில் 40 சதவீதம் பேர் அமெரிக்காவை விட்டு வெளியேறுவது பற்றி யோசித்து வருவதாக அண்மைக்கால ஆய்வு ஒன்றும் தெரிவிக்கிறது.
இதனால், அடுத்த தலைமுறை தொழில்நுட்ப சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்காக நாட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை என்றும், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உலகத்தரமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
