
புதுச்சேரி மாவட்டம் வாஸ்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருக்கும், பாகூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. பாலசுப்ரமணியன் அமெரிக்காவில் உள்ள சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். அதேபோன்று திருமணத்திற்குப் பிறகு சௌமியாவும் அங்கு சென்று ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 8 மற்றும் 7 வயதில் 2 மகன்களும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி வழக்கம் போல் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சௌமியாவை சுட்டுள்ளார். இதில் சௌமியா சரிந்து விழுந்து உயிரிழந்தார். பின் அதே துப்பாக்கியைக் கொண்டு பாலசுப்ரமணியன் தன்னை தானே சுட்டுக் கொண்டார். துப்பாக்கியின் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு அங்கிருந்த 3 குழந்தைகளையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து புதுச்சேரியில் இருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் சௌமியாவும், கடலூரைச் சேர்ந்த உறவுக்கார இளைஞரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்துள்ளனர்.
அதன் பிறகு இருவருக்கும் திருமணமாகிவிட்டாலும், திருமண உறவை தாண்டி நட்பில் இருந்துள்ளனர். சௌமியா இந்தியாவுக்கு வரும்போது எல்லாம் ஒரு விடுதியில் தங்கி இருந்திருக்கிறார்கள். அப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த பாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்று அவர் கூறினார்.