அதிமுக கட்சியிலிருந்து அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிசாமி நீக்கிய நிலையில் அவர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். சமீபத்தில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்த நிலையில் பாஜகவால் மீண்டும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என அவர் கூறியிருந்தார். அதோடு அதிமுகவுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றும் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான அன்வர் ராஜா கூறிய நிலையில் பாஜக கூட்டணி காரணமாக அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக தன்னுடைய கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜக வலையில் சிக்கி உள்ளது. பாஜக ஒரு நெகட்டிவ் சக்தி என்பதால் தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
அமித்ஷா 3 முறை பேட்டி அளித்த நிலையில் ஒரு இடத்தில் கூட ஒருமுறை கூட எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தெரிவிக்கவில்லை. நான்தான் போரை நிறுத்தினேன் என டிரம்ப் கூறுவது போல் கடந்த 10 நாட்களாக நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அதிமுக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தாலும் 10 நாட்களில் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகி விடுவார். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் நோக்கம் கிடையாது. அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம் என்று கூறினார். மேலும் திமுக கட்சியில் இணைந்த பிறகு அன்வர் ராஜா அதிமுக குறித்து பேசியது பரபரப்பாக பேசப்படுகிறது.
