அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போலியானவை அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என கணிசமான அமெரிக்கர்கள் நம்புவதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது. நியூஸ்கார்ட் (NewsGuard) மற்றும் யூ-கவ் (YouGov) ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. கடந்த ஏப்ரல் 28 முதல் மே 4 வரை சுமார் 1,000 அமெரிக்கர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, டிரம்ப் மீது நடத்தப்பட்ட சமீபத்திய மூன்று தாக்குதல்களில், குறைந்தபட்சம் ஒன்றாவது போலியாக இருக்கலாம் என மூன்றில் ஒரு அமெரிக்கர் கருதுகின்றனர். அதாவது ஏப்ரல் 25-ல் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின் போது டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போலியானது என 24% பேர் தெரிவித்துள்ளனர். எனினும், 45% பேர் இது உண்மையான தாக்குதல் என நம்புகின்றனர்.

இந்தத் தாக்குதலைப் பொறுத்தவரை ஜனநாயகக் கட்சியினரில் 33% பேர் இது போலியானது எனக் கருதும் வேளையில், குடியரசுக் கட்சியினரில் வெறும் 8% பேர் மட்டுமே அவ்வாறு கருதுகின்றனர். கடந்த 2024 ஜூலை மாதம் பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்பின் காதைத் துளைத்துச் சென்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியது.இச்சம்பவத்தை 24% பேர் போலியானது எனக் கருதுகின்றனர். அதேபோல், செப்டம்பர் 2024-ல் புளோரிடாவில் உள்ள டிரம்பின் கோல்ஃப் கிளப் அருகே நடந்த தாக்குதல் முயற்சியை 16% பேர் போலியானது எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மற்ற வயதினரை விட அதிக அளவில் இந்தத் தாக்குதல்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகமாக இருக்கலாம் என நம்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்துப் பேசிய நியூஸ்கார்ட் ஆசிரியர் சோபியா ருபின்சன், “அரசு மற்றும் ஊடகங்கள் மீதான அமெரிக்க மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதையே இது காட்டுகிறது” என்றார். இதற்கிடையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டேவிஸ் இங்கல் இந்தத் தகவல்களை மறுத்துள்ளார். “டிரம்ப் தன் மீது தானே தாக்குதல் நடத்திக் கொண்டார் எனக் கூறுபவர்களின் வாதம் முற்றிலும் தவறானது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், டிரம்ப் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோல் தாமஸ் ஆலன் என்பவர், தான் நிரபராதி என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.