இன்றைய கார்ப்பரேட் உலகில் பலரும் அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஷிப்னாஸ் ஷெரீப் என்ற இளம் பெண் முற்றிலும் மாறுபட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆண்டுக்கு 10.25 லட்சம் ரூபாய் ஊதியம் கிடைத்து வந்த தனது உயரிய வேலையைத் துறந்துவிட்டு, தனது தந்தையின் பாரம்பரிய மரச்சாமான்கள் (Furniture) வணிகத்தில் இணைந்துள்ளார்.
தற்போது இவரது ஆண்டு வருமானம் 4.75 லட்சம் ரூபாயாகக் குறைந்திருந்தாலும், இது ஒரு பின்வாங்கல் அல்ல, மாறாகத் தனது குடும்பத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு தொலைநோக்குப் பார்வை என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சந்தைப்படுத்தல் (Marketing) துறையில் சிறந்த அனுபவம் கொண்ட ஷிப்னாஸ், அந்தத் திறமையைத் தனது குடும்பத் தொழிலில் புகுத்த விரும்பினார். கடந்த 17 ஆண்டுகளாகத் தனது தந்தை உழைப்பால் உருவாக்கிய இந்தத் தொழிலை, நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் உலகத் தரத்திற்கு உயர்த்த அவர் திட்டமிட்டுள்ளார்.
வாரிசு அரசியலைப் போலன்றி, குடும்பத் தொழில்களில் புதிய தலைமுறை புகுத்த விரும்பும் மாற்றங்களைத் தனது தந்தை ஏற்றுக்கொள்வது தனக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பளத்தைக் காட்டிலும் தனது வேர்களுடன் இணைந்து பணியாற்றுவதே தமக்கு உண்மையான வெற்றியைத் தருவதாக ஷிப்னாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
