சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆட்டோ ஓட்டுநர்களின் வினோதமான அலங்காரங்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பரவி வரும் ஒரு வீடியோ, ஒரு தந்தையின் போராட்டத்தையும் பாசத்தையும் உலகிற்குப் பறைசாற்றி, காண்போர் கண்களைக் கலங்க செய்துள்ளது.
சமீபத்தில் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர், பின் இருக்கையில் ஒரு சிறுமி மிகவும் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை கவனித்தார். ஆட்டோவின் இரைச்சல், சாலைகளின் மேடு பள்ளங்கள் என எதையும் பொருட்படுத்தாமல் அந்தச் சிறுமி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
இது குறித்து அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் பயணி விசாரித்தபோது, நெகிழ்ச்சியான உண்மை வெளிவந்தது.
அந்த ஓட்டுநர், சிறுமி தனது மகள் ‘ஆயுஷி’ என்று அறிமுகப்படுத்தினார். சிறுமியின் தாய் இறந்துவிட்ட நிலையில், வீட்டில் அவளைப் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத சூழல். மகளைத் தனியாக விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல மனமில்லாத அந்தத் தந்தை, தினமும் தான் ஆட்டோ ஓட்டச் செல்லும் போதெல்லாம் மகளையும் கூடவே அழைத்துச் செல்கிறார்.
View this post on Instagram
தனது வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் அதே வேளையில், மகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அந்தத் தந்தையின் பொறுப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
“தந்தை அருகில் இருக்கிறார்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், அந்தச் சிறுமி ஆட்டோ பயணத்தையே தனது வீடாக மாற்றிக் கொண்டு உறங்குவது பார்ப்போரை நெகிழச் செய்கிறது. வீடியோவின் இறுதியில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கித் தருகிறார். அப்போது அந்தச் சிறுமி வெட்கத்துடன் புன்னகைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள், “எளிய மக்களின் சத்தமில்லாத போராட்டத்திற்கு இந்தத் தந்தை ஒரு சிறந்த உதாரணம்” என்றும், “தந்தை எனும் உறவின் வலிமை இதுதான்” என்றும் பதிவிட்டு வருகின்றனர். ஒற்றைப் பெற்றோர் (Single Parent) எதிர்கொள்ளும் சவால்களை இந்த வீடியோ மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
