தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேவேளையில், தமிழக அரசியலைத் தொடர்ந்து டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தடம் பதிக்க தவெக தயாராகி வருகிறது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு முதலமைச்சர் விஜய் மகத்தான வெற்றி பெற்றார். சட்ட விதிகளின்படி இரு தொகுதிகளில் ஒன்றை அவர் தக்கவைக்க வேண்டிய சூழலில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த இடைத்தேர்தலில் தவெக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, அஇஅதிமுக-வின் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக, அவர் வகித்து வந்த டெல்லி மாநிலங்களவை  எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தமிழ்நாட்டிற்கான ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாகியுள்ளது.

தற்போது தமிழகச் சட்டமன்றத்தில் 108 எம்.எல்.ஏ.க்களுடன் அதிக பலம் கொண்ட தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளதால், விகிதாச்சார அடிப்படையில் காலியாகும் அந்த ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி தவெக-விற்கே கிடைக்கப் போவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கையோடு, டெல்லி நாடாளுமன்றத்திலும் தங்களது முதல் பிரதிநிதியை அனுப்பும் அரிய வாய்ப்பு தவெக-வுக்குக் கிடைத்துள்ளது. ‘தவெக-வின் முதல் எம்.பி.’ என்ற வரலாற்றுப் பெருமையுடன் டெல்லிக்குச் செல்லப் போகும் அந்த முக்கிய நிர்வாகி யார்? என்ற கேள்வி தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் அதே நேரத்தில்  கட்சியின் மூத்த மற்றும் நம்பிக்கைக்குரிய நிர்வாகி ஒருவருக்கே இந்த வாய்ப்பை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவெடுத்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.