டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று  (அக்டோபர் 11) நடைபெற்ற 2023 உலகக் கோப்பை போட்டியின் போது, ​​இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது,  விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் இருவரும் கைகுலுக்கி தங்கள் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 9வது ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள்  டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 2 மணி முதல் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்தது.. ஆப்கான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 88 பந்துகளில் (8 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) 80 ரன்களும், ஒமர்சாய் 69 பந்துகளில் (2 பவுண்டரி, 4 சிக்ஸர்) 62 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் அதிரடி சதத்தால் 35 ஓவரில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 131 ரன்கள் எடுத்தார். மேலும் விராட் கோலி 55 ரன்களும், இஷான் கிஷன் 47 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 25 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தி புள்ளிபட்டியலில் 2வது இடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் ஒரு சுவாரஷ்ய சம்பவம் நடந்துள்ளது. 26வது ஓவரில் ரஷித் ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்தார், இடைவேளையின் போது நவீன்-உல்-ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். கைகளைப் பிடித்து, பின் முதுகைத் தட்டி இருவரும் அழகான புன்னகையை பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் விராட் கோலி -நவீன் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது.

ஐபிஎல்லில் தொடங்கிய மோதல் :

இந்தியன் பிரீமியர் லீக் 2023ல் இருந்தே இந்த இரு வீரர்களுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.நவீன் உல் ஹக் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேபோல விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் விராட் கோலிக்கும், நவீனுக்கும் இடையே போட்டியின் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. இதில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கூட போட்டி முடிந்த பின் களத்திற்கு வந்து விராட் கோலியிடம் மோதினார். இருவதும் வார்த்தை போரில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் மிகவும் தீவிரமடைந்தது, நவீன் உல் ஹக் விராட் கோலியின் பெயரைக் குறிப்பிடாமல் சமூக ஊடகங்களில் அவரைக் குறிவைத்தார். ஆனால், அதற்கு விராட் தக்க பதிலடி கொடுத்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் மீண்டும் களத்தில் ஒருவரையொருவர் நேற்றைய போட்டியில் எதிர்கொண்டனர். எனவே எப்படியும் இந்த போட்டியில் ஒரு பெரிய சம்பவம் இருக்கிறது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நடந்ததோ வேறு, அப்படியே தலைகீழான மாற்றம் நடந்தது. இருவரும் போட்டியின் போது கட்டிப்பிடித்து பிரச்சனையை முடித்து கொண்டனர்.

நாங்கள் முடித்துவிட்டோம் :

போட்டிக்கு பின் பேசிய நவீன் உல் ஹக், “விராட் கோலி ஒரு நல்ல வீரர், டெல்லி அவரது சொந்த மைதானம், மக்கள் தங்கள் சொந்த ஊரான பையனை ஆதரித்ததால் அவர்கள் ‘கோலி, கோலி’ என்று கோஷமிட்டனர். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். அது எப்போதும் மைதானத்தில் தான் நடக்கும்; மைதானத்திற்கு வெளியே எதுவும் இல்லை. மக்கள் அதை பெரிதாக்குகிறார்கள். நான் கைகுலுக்கிய பிறகு, விராட் அதை முடித்துவிடுவோம் என்று அவர் கூறினார். நான் சரி, முடித்துவிடுவோம் என்றேன், நாங்கள் கைகுலுக்கி கட்டிப்பிடித்தோம்.” என்று கூறினார்.

நவீன் உல்-ஹக்கை டெல்லியில் ரசிகர்கள் ட்ரோல் செய்ததை அடுத்து விராட் கோலி அவரை காப்பாற்ற வந்தார்.

விராட் கோலியுடன் களத்தில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, நவீன்-உல்-ஹக் ட்ரோல்களுக்கு ஆளானார் மற்றும் அடிக்கடி ‘கோலி, கோலி’ கோஷங்களுடன் கிண்டலடிக்கப்பட்டார். கடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கூட கோலி, கோலி என கத்தி ரசிகர்கள் அவரை வெறுப்பேற்றினர். அதேபோல தான் நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்து இந்த கோஷம் எழுப்பப்பட்டது.

டெல்லியில் உள்ள கோலியின் சொந்த மைதானத்தில் போட்டி நடப்பதால், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போதும் இதேபோன்ற சூழ்நிலையை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல ஆட்டத்தின் போது கூட்டம் நவீனை கூச்சலிட்ட போது, ​​கோலி இந்திய அணி பேட்டிங்கின் போது 26வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் நவீனை  காப்பாற்ற வந்தார், ரசிகர்கள் அவரை கேலி செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். பின் தான் நவீன் நேராக கோலியிடம் சென்று பேச, இருவரும் கட்டிப்பிடித்து சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர். மேலும் போட்டிக்குப் பிறகு விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் மீண்டும் கட்டிப்பிடித்து, சிரித்து மகிழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

களத்தில் பொதுவாக ஆக்ரோஷமாக செயல்படுபவர் கோலி.. அதனை அவர் களத்திற்கு வெளியே எடுத்துசெல்வதில்லை. நவீனுடன் மோதல் இருந்த நிலையிலும், ரசிகர்களிடம் இப்படி செய்யாதீர்கள் என அறிவுரை வழங்கி நெகிழச்செய்துள்ளார். இது முதல் முறையல்ல. ஆம் 2019 உலகக் கோப்பையில் ஸ்டீவன் ஸ்மித்தை சீண்டுவதை நிறுத்துமாறு விராட் கோலி ரசிகர்களை  கேட்டுக் கொண்டார். அதன்பின் தனக்கு ஆதரவு அளித்த கோலிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஸ்மித் அவரின் கையை தட்டி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

2023 உலகக் கோப்பையில்  இந்திய அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளுடன், தற்போது புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

https://twitter.com/Xavviieerrrrrr/status/1712125794020192449