2026 டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. இந்தப் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்களைச் செய்ய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறிப்பாக, தொடக்க வீரராகக் களம் கண்டு வந்த அபிஷேக் சர்மா, சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாற்றம் காட்டி வருவதால் அவரை அணியிலிருந்து நீக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவருக்குப் பதிலாக மிடில் ஆர்டரை வலுப்படுத்த அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும் அபிஷேக் சர்மா நீக்கப்படும் பட்சத்தில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி தொடக்க வீரர்களாகக் களம் இறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடக்கூடிய ரிங்கு சிங்கின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என கம்பீர் நம்புகிறார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தற்போது முழுமையான ஃபார்மில் இல்லாத நிலையில், திலக் வர்மா மற்றும் சிவம் துபே ஆகியோருடன் ரிங்கு சிங்கும் இணைந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
