2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று பிரம்மாண்ட நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தனது பாணியில் ஒரு குட்டி கதையைக் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். “ஒரு சாலையில் கட்டுக்கடங்காத காளை ஒன்று யாராலும் அடக்க முடியாமல் சிலிர்த்துக் கொண்டிருந்தது. பெரிய ஜாம்பவான்கள் கூட அதை நெருங்க பயந்தனர்.

அப்போது கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஒரு சின்ன பையன் முன்னே வந்தான். அவனுக்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் விமர்சித்தனர். ஆனால் அந்தப் பையன் எந்தப் போராட்டமும் செய்யாமல், அன்புடன் ஒரு புல்லுக்கட்டை காட்டியே அந்தக் காளையைத் லாவகமாகத் தன் பின்னால் கூட்டிச் சென்றான்” என்று கூறி முடித்தார்.

இந்தக் கதையின் மூலம், அரசியலில் ‘அனுபவம் இல்லை’ எனத் தன்னை விமர்சிப்பவர்களுக்கு, அன்பும் சரியான அணுகுமுறையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற மறைமுகப் பதிலை விஜய் வழங்கியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு பிரம்மாண்ட பந்தல் மற்றும் மினி மருத்துவமனை வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டது வேலூர் மாவட்டத்தையே அதிர வைத்தது.