2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக மூன்றாவது முறையாகவும் டி20 உலகக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது. சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது.
இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் மண்ணைத் தொட்டு வணங்கிய நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் வெற்றியில் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும், ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றனர். அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தனர். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அதிரடி காட்டிய இந்திய வீரர்கள், மைதானத்தில் தேசியக் கொடியுடன் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
