ஆந்திரப் பிரதேசம் ராஜமுந்திரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கோதவரி நதிப் பாலத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த வழக்கில் ஷூட்டிங் பயிற்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நள்ளிரவில், பிதாபுரத்தில் பஞ்சாயத்து ராஜ் துறையில் பணிபுரிந்த 61 வயது உதவிப் பொறியாளர் தில்லபுடி நூகராஜு, அவரது மனைவி மீனா, மற்றும் மகள் கோவூரி சௌஜன்யா ஆகியோர் தங்கள் 10 வயது சிறுவன் ரியாந்துடன் கோதவரி நதிப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தனர்.
இந்த விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக 10 வயது சிறுவன் ரியாந்த் பாலத்தின் கம்பிகளில் சிக்கி ஆற்றில் மிதந்தான். சுமார் 20 நிமிடங்கள் நீரோட்டத்துடன் போராடிய அந்தச் சிறுவனை உள்ளூர் மீனவர்களும் காவல்துறையினரும் இணைந்து பத்திரமாக மீட்டனர். இருப்பினும், நூகராஜு, மீனா மற்றும் சௌஜன்யா ஆகிய மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திலும், வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலமாகவும் இறந்த குடும்பத்தினர் எழுதிய மரண கடிதங்கள் காவல்துறையினருக்குக் கிடைத்தன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்ட அந்த கடிதங்களில் ஷூட்டிங் பயிற்சியாளர் சாடிக் கான் என்பவரின் பெயரும் அவரது கொடுமைகளும் வெளிச்சத்திற்கு வந்தன. அதாவது கணவனை இழந்த சௌஜன்யாவுடன் நெருக்கமாகி, பின்னர் அவருக்கு உதவிகள் செய்வது போல் நடித்து வீட்டிற்குள் நுழைந்த சாடிக் கான், அவரைத் தொடர்ந்து கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற அழுத்தம் கொடுத்துள்ளார். தினமும் இஸ்லாமிய புத்தகங்களைப் படித்து குறிப்புகள் எழுத வற்புறுத்தியதுடன், மறுத்தால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
சௌஜன்யாவின் வங்கி லாக்கர் சாவிகள், கைப்பேசி மற்றும் சொத்து ஆவணங்களை மோசடியாகத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். சௌஜன்யாவின் 10 வயது மகனைக் கடத்தித் தீவிரவாதிகளுக்கு விற்றுவிடுவேன் என்று சாடிக் கான் மிரட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு மேலும் தீவிரமடைந்த நிலையில், சௌஜன்யாவின் மாமனார் பாஸ்கர் ரெட்டி காவல்துறையில் அளித்த புகாரில், சௌஜன்யாவின் கணவர் ஜெகதீஷ் ரெட்டியை கடந்த ஜூலை 2-ஆம் தேதி சாடிக் கான் விஷ ரசாயனம் அல்லது ஊசி கொடுத்துக் கொலை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் முழு குடும்பத்தையும், அவர்களின் சொத்துகளையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவே இந்தக் கொலையைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாடிக் கான் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆந்திரக் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு உத்திரப்பிரதேச காவல்துறையின் உதவியுடன், ஐந்திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி மீரட் பகுதியில் பதுங்கியிருந்த சாடிக் கானைக் கைது செய்தது. காகிநாடா நீதிமன்றம் அவரை 14 நாள் காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினர் அவரது செல்போன், கால் விவரங்கள் மற்றும் வங்கிப் பரிமாற்றங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
