மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் அமைந்துள்ள வத்தோடா பகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் கவுன்சிலர் சுபம் மோத்கரே என்பவரது வீடு அமைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில், இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இந்தத் திடீர் தாக்குதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்து சுக்குநூறாகச் சிதறின.
Nagpur, Maharashtra: Two unidentified men opened fire at the house of Congress councillor Shubham Motghare in the Wathoda area late at night. No one was injured, but a window was damaged. Police are searching for the accused and investigating the motive behind the firing pic.twitter.com/AEJJEZyafl
— IANS (@ians_india) August 26, 2026
சம்பவம் நடக்கும்போது கவுன்சிலர் சுபம் மோத்கரே பால்கனி வழியாக வீட்டிற்குள் நுழைந்ததாகவும், அதே நேரத்தில் அவரது மகளும் அருகில் நின்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலில் தந்தை மற்றும் மகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றித் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், இந்தத் தாக்குதல் தொடர்பாகப் புகாரைப் பெற்றுள்ள காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதில், முகமூடி அணிந்த இரண்டு பேர் மோபட் வாகனத்தில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடியது பதிவாகியுள்ளது. இச்சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
