சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெளிநாட்டு டி20 லீக் தொடரான ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) போட்டியில், காவ்யா மாறனுக்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சுமார் 2.34 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டு லீக் அணிகளை வாங்கினாலும், இதுவரை பாகிஸ்தான் வீரர்களைத் தங்கள் அணியில் சேர்க்காமல் ஒரு எழுதப்படாத விதியைப் பின்பற்றி வந்தனர்.

ஆனால், அந்த மரபை உடைத்து காவ்யா மாறன் பாகிஸ்தான் வீரரை வாங்கியது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் வீரர்களுக்கு நாம் கொடுக்கும் கோடிக்கணக்கான பணம் மறைமுகமாக இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்தப்படுவதாகவும், அந்த பணத்தைக் கொண்டுதான் அவர்கள் நம் நாட்டு வீரர்களைக் கொல்வதாகவும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

காவ்யா மாறனின் இந்த முடிவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.