சின்னத்திரை உலகிலும், வெள்ளித்திரையிலும் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அருவி, தாதா படப் புகழ் மற்றும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய விரிசல் குறித்து வெளியிட்டுள்ள பதிவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பூஜா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில், தனது மனைவி பூஜாவை விட்டுப் பிரிந்து விட்டதாகவும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக உருக்கமாகவும் கோபமாகவும் பதிவிட்டுள்ள பிரதீப் ஆண்டனி, “நான் என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய தவறான ஒரு முடிவை எடுத்துவிட்டேன். முற்றிலும் தவறான ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டேன் என்று நினைக்கிறேன்.
அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் நான் ஒரு மோசமான மனிதனாக மாறிக்கொண்டு வருகிறேன். இருவருக்கும் இடையே எந்தவிதப் புரிதலும் இல்லை; முற்றிலும் மாறுபட்ட இரு துருவங்கள் தினமும் மோதிக்கொள்வது போலத்தான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இதனால் இந்தத் திருமண பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்துவிட்டேன்” என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது பிஞ்சு மகனைப் பிரிந்திருக்கும் வேதனை குறித்துப் பேசிய அவர், ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துத் தனது குழந்தைக்குச் சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதே தன் வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக இருந்ததாகவும், ஆனால் இப்போது அந்தப் பாக்கியமே பறிபோய் விட்டதாகவும் குமுறியுள்ளார்.
தன் குழந்தையை விட்டுப் பிரிந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டதாகவும், பெற்றோர் தினமும் சண்டையிட்டு வெறுப்பைக் காட்டுவதை விட குழந்தை தாயுடன் இருப்பதே நல்லது என்பதால் விட்டுக்கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அந்தப் பதிவை அவர் நீக்கிய போதிலும், அதற்குள் அதன் ஸ்கிரீன்ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
