பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில், சோதனையிடும் சாக்கில் தென் கொரியப் பெண் பயணி ஒருவரிடம் பாதுகாப்பு அதிகாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவைச் சேர்ந்த கிம் சுங் க்யுங் என்ற பெண்மணி, கடந்த 19-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையம் வந்துள்ளார். குடியுரிமை (Immigration) சோதனைகள் முடிந்த பிறகு, அவர் பாதுகாப்புச் சோதனைக் சாவடிக்குச் சென்றார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அபான் அகமது என்ற ஊழியர், அந்தப் பெண்ணின் உடமைகளைச் சோதனை செய்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலிப்பதாகக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, விரிவான சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி, கழிவறைக்கு அருகே இருந்த ஒரு தனி அறைக்கு அந்தப் பெண்ணை அபான் அகமது அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணின் அந்தரங்கப் பகுதிகளில் கை வைத்து அத்துமீறியதோடு, அவரைக் கட்டிப்பிடித்துக் கொடூரமாக நடந்து கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரியின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த கொரியப் பெண், உடனடியாக கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அபான் அகமது, “மன்னித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் உடனடியாக விமான நிலையக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனக்கு நேர்ந்த துயரம் குறித்து வீடியோ வெளியிட்ட அந்தப் பெண், இந்தியாவைப் புகழ்ந்து பேசியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. அவர் கூறியதாவது: “எனக்கு நேர்ந்த இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக நான் இந்தியாவைக் குறை சொல்ல மாட்டேன். இது ஒரு தனிநபரின் கீழ்த்தரமான செயல். இந்தியா இப்போதும் எனக்கு மிகவும் பாதுகாப்பான நாடுதான். இங்குள்ள கலாசாரத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், ஐ.பி.சி. (IPC) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த அபான் அகமதுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.