கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இரு மொழி கொள்கையால் தமிழக மாணவர்களின் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும் தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் கேட்கின்றார். அவருக்கு நான் கூறிக் கொள்கின்றேன், இது தமிழ்நாடு, தமிழை தாய் மொழியாக கொண்ட பெருமைக்குரியவர்கள் எங்கள் தமிழர்கள்.

எங்கள் உயிரை விட மேலாக தமிழை மதிப்பவர்கள் நாங்கள். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழியை இணைத்தாலும் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஒரு கருத்தை கூறியுள்ளார். ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி என்று கூறியுள்ளார். அவர் பழைய வரலாற்றை கூறி இருந்தாலும் அது தமிழகத்தின் புதிய வரலாறாக கொடிய வரலாறாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.