கொடைக்கானலில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்வில் கலந்து கொண்டு, விநாயகர் சிலையை வழிபட்ட ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும். தி.மு.க.வை வீழ்த்தும் நோக்கத்தில் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் ஒன்று திரளும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து த.வெ.க. குறித்து கருத்து தெரிவித்த அவர், “த.வெ.க. ஒரு அரசியல் கட்சி அல்ல; அது தி.மு.க.வின் ஏ டீமாகவே செயல்பட்டு வருகிறது. தங்களை தி.மு.க. எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், அவர்கள் அதே கொள்கைகளை பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் நடத்தியது அரசியல் மாநாடு அல்ல; ரசிகர்கள் மாநாடு. அந்த மாநாட்டில் விஜய்யை காண வந்த ரசிகர்கள் பவுன்சர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டதைப் பார்த்தோம். இது தான் அரசியல் நாகரிகமா? ரசிகர்களிடம் அக்கறையும், கருணையும் இல்லாத ஒரு நிகழ்வாக அது அமைந்தது. எப்படி ஒரு மாநாடு நடக்கக் கூடாது என்பதற்கான எடுத்துக்காட்டு அது” எனக் கடுமையாக விமர்சித்தார்.
