மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரின் தெருக்களில் அண்மையில் வலம்வந்த ஒரு விசித்திரமான கார், பொதுமக்களின் கண்களைப் பெரிதும் ஈர்த்ததுடன், இணையத்தில் பெரும் வைரல் அலையையும் ஏற்படுத்தியது. இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் அதிக பார்வைகளைப் பெறும் மோகத்தால், அந்த இளைஞர் தனது காரை விவரிக்க முடியாத அளவுக்கு மாற்றியதே இந்தச் பரபரப்புக்குக் காரணம்.
இளைஞர் ஒருவர் தனது காதலியின் உதவியுடன் கார் முழுவதும் லிப்ஸ்டிக்கால் முத்தமிட்டது போன்ற கறைகளை அச்சிட்டுள்ளார். பார்க்கவே வித்தியாசமாக இருந்த இந்தக் காரை ஓட்டிச் சென்று அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். எதிர்பார்த்தபடியே அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது. ஒரே நாளில் சுமார் 55 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்த அந்த வீடியோ, இணையவாதிகளிடையே பேசுபொருளானது.
சாலையில் அதிவேகமாகப் பறந்த இந்த ‘லிப்ஸ்டிக் கார்’ வீடியோ காவல்துறையினரின் கவனத்தையும் ஈர்த்தது. உடனே விழிப்புடன் செயற்பட்ட போக்குவரத்து போலீசார், வீடியோவின் அடிப்படையில் காரின் பின்னணியைத் தேடித் தடம் பிடித்தனர். விசாரணையில் அந்த கார் தாட்டிபூர் பகுதியைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. உடனே களமிறங்கிய போலீஸ் படையினர், அந்தத் தனித்துவமான காரை கைப்பற்றிப் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு இழுத்து வந்தனர். காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட கார் உரிமையாளரான அந்த இளைஞர், தான் செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
மட்டமன்றி, போலீசாரின் உத்தரவின் பேரில் அவரே தன் கைகளால் தண்ணீரை ஊற்றி காரின் மீது இருந்த லிப்ஸ்டிக் முத்த அடையாளங்களை முழுமையாகத் துடைத்து அகற்றினார். மோட்டார் வாகனச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் அந்த வாகனத்திற்கு 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகத் போக்குவரத்து காவல் நிலைய பொறுப்பாளர் அபிஷேக் ரகுவன்ஷி தெரிவித்தார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காகத் தொடங்கிய இந்தச் சாகசம், இறுதியில் காவல் நிலையம் வரை வந்து அபராதத்துடன் முடிந்துள்ளது அப்பகுதியில் சிரிப்பலையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
