ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி முதலில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

ரோகித் சர்மா 4 ரன்னிலும், இஷான் கிஷன் 9 ரன்னிலும் அவுட் ஆன நிலையில், நமன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சூர்யகுமார் 102 ரன்கள் எடுத்து சதம் அடித்து அசத்திய நிலையில் திலக் வர்மா 37 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில் மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. மேலும் இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை  வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.