தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் த.வெ.க. 2026 தேர்தலில் அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க., குறிப்பாக தனித்தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள 46 தனித்தொகுதிகளில் பாதிக்கும் மேலாக, அதாவது 23 தொகுதிகளைக் கைப்பற்றி த.வெ.க. சாதனை படைத்துள்ளது. பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, மானாமதுரை உள்ளிட்ட முக்கியமான தனித்தொகுதிகளில் அடுக்கடுக்கான வெற்றிகளைப் பெற்று, சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் விஜய் பெற்றுள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
மற்றொரு புறம், நீண்டகாலமாக தமிழக அரசியலில் கோலோச்சிய திராவிடக் கட்சிகள் இந்தத் தனித்தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தனித்தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 10 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 9 இடங்களையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதனால் ஒரு புதிய கட்சி, தனது முதல் தேர்தலிலேயே பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சரிபாதி இடங்களை வென்றிருப்பது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. இந்த முடிவுகள் பாரம்பரிய அரசியல் கணக்குகளை மாற்றி அமைத்துள்ளதுடன், விஜய்யின் அரசியல் நகர்வுகளுக்குப் பலத்த அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது.
