தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 108 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இதன் மூலம் கடந்த 59 ஆண்டுகளாக தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் களம் கண்ட கட்சிகள் பெற்ற வாக்குகள்
த.வெ.க. 108 34.02% 1,72,26,209
தி.மு.க. 59 24.19% 1,19,29,144
அ.தி.மு.க. 47 21.21% 1,04,62,146 ஆகும்.
ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. 59 இடங்களுடன் இரண்டாம் இடத்தையும், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. 47 இடங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்து பின்னடைவைச் சந்தித்துள்ளன.
பொதுவாக ஒரு தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு, அவற்றின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களைத் தாண்டி பொதுமக்களும் வாக்களிப்பது வழக்கம். ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே அவற்றின் சொந்தத் தொண்டர்களே முழுமையாக வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வாக்கு எண்ணிக்கை விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2023 ஜூன் மாத நிலவரப்படி, தி.மு.க.வின் உறுப்பினர் எண்ணிக்கை 2 கோடியை எட்டியதாக அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க. பெற்ற மொத்த வாக்குகளோ 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. இதன் மூலம், அக்கட்சியின் சொந்த உறுப்பினர்களிலேயே சுமார் 80 லட்சம் பேர் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதேபோல், கடந்த 2023 ஜூலை மாத கணக்கீட்டின்படி, தங்களுக்கு 1 கோடியே 90 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்தது. ஆனால், தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்ததோ 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகள் மட்டுமே. இதன்படி பார்த்தால், அ.தி.மு.க.வின் தொண்டர்களில் சுமார் 85 லட்சம் பேர் அக்கட்சியைப் புறக்கணித்துள்ளது தெரியவருகிறது.
சொந்தக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை விட மிகக் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளதால், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்துமாறு கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்ட போது, அவர்கள் போலிப் பெயர்களிலோ அல்லது முறைகேடான வழிகளிலோ உறுப்பினர்களைச் சேர்த்து தலைமைக்குத் தவறான புள்ளிவிவரங்களை வழங்கினார்களோ என்ற பலத்த சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.
மேலும் காரணம் எதுவாக இருந்தாலும், தமிழகத்தின் இரு பெரும் பாரம்பரியமிக்க திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, புதிய கட்சியான த.வெ.க. ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாகப் பார்க்கப்படுகிறது.
