தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் மே 4-ம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளுக்காகத் தவம் கிடக்கும் வேளையில், ‘டைம்ஸ் நவ் – ஜேவிசி’ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் (Exit Poll) முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
இந்தத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், அதிமுக கூட்டணி 128 முதல் 147 இடங்கள் வரை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கட்டிலில் அமரும் என்றும், ஆளும் திமுக கூட்டணி 75 முதல் 98 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்டுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 8 முதல் 15 இடங்கள் வரை பிடித்து ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இம்முறை பதிவாகியுள்ள 85% அதிகமான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு, ஆளும் கட்சிக்கு எதிரான ‘ஆன்டி-இன்கம்பன்சி’ அலையாக மாறியுள்ளதையே இந்தக் கணிப்புகள் பிரதிபலிக்கின்றன.
குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகள் அதிமுக மற்றும் தவெக பக்கம் சாய்ந்துள்ளதே திமுகவின் சரிவுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் மாறுபட்ட கணிப்புகளை வெளியிட்டு வருவதால், ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் இந்தக் கணிப்பு மே 4-ம் தேதி உண்மையாகுமா அல்லது களநிலவரம் மாறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
எது எப்படியோ, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்தக் கணிப்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்க, அறிவாலயத் தரப்போ இதையெல்லாம் முறியடித்து மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.
