தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தலைமையில், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்துத் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
இந்த திடீர் மாற்றத்தினால், சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 44 ஆகக் குறைந்துள்ளது. ராஜினாமா செய்துள்ள இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும், எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த கையோடு, அவர்கள் தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சியில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இவர்கள் மூவரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவைச் சந்தித்துப் பேசியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
