ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு (ஏஎஸ்ஆர்) மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 12) அதிகாலை நடந்த கோர விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் காயமடைந்துள்ளனர். சித்தூரிலிருந்து தெலுங்கானா மாநிலம் வழியாக மாரேடுமில்லி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, சிந்தூர்-மாரேடுமில்லி காட் சாலையில் துர்கா கோயில் அருகே பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட சுமார் 37 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படும் இந்தப் பேருந்து, பத்ராசலத்தில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு அன்னவரம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து அதிகாலை 4:30 மணியளவில் நடந்ததாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அமித் பர்தார் தெரிவித்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த பயணிகள் உடனடியாகப் பத்ராசலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.