மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரட்லம் நகரில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்து 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, பகவத் மௌரியா என்பவர் தனது எலக்ட்ரிக் பைக்கை வீட்டிற்கு வெளியே சார்ஜ் போட்டுள்ளார். அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்தது.
மேலும் மற்றொரு வாகனத்திற்கும் தீ வேகமாக பரவியது. அதிகாலை 2.30 மணிக்கு தீ விபத்து நடந்ததால் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் அதை கவனிக்கவில்லை. அதன் பிறகு தீ பற்றி வீட்டிற்குள் புகை மூட்டம் வந்ததால் உடனே எழுந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் பகவதி மௌரியாவின் பேத்தி அன்ட்ரா மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும் பகவதி மௌரியா, லாவண்யா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆன்ரா தனது தாயுடன் தாத்தா வீட்டிற்கு வந்திருந்தார். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருக்கும் வீட்டிற்கு திரும்புவதாக இருந்தது. அதற்குள் அசம்பாவிதம் நடந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
