லக்னோ நகரில் இன்று காலை ஒரு பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் இரு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளனர். பேருந்து பீகாரிலிருந்து டெல்லி நோக்கி சென்றுவந்தபோது, லக்னோவின் மோஹன்லால்கஞ்ச் அருகே உள்ள கிசான் பாதையில் காலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், புகை பேருந்து முழுவதும் பரவ ஆரம்பித்தது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுநர் ஒரு ஜன்னலை உடைத்து வெளியே குதித்து தப்பிச் சென்றார். வெளியேறும் வழியில் ஓட்டுநரின் அருகில் கூடுதல் இருக்கை ஒன்று பொருத்தப்பட்டிருந்ததாலும், அவசர வெளியேறும் கதவும் திறக்காமலிருந்ததாலும், பயணிகள் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவித்தனர். இதில் பலர் கீழே விழுந்து காயமடைந்தும் உள்ளனர்.

தீ பற்றிய செய்தி கிடைத்ததும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்தினாலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதுமாக சாம்பலாகி போனது. இது தொடர்பாக போலீசார் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.  மேலும் தீ விபத்தில் ஐந்து பயணிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.