மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு முதியோர் இல்லத்திற்கு பின்புறம் ஒரு குடிசை வீடு உள்ளது. அங்கு 11 வயதுடைய காது கேளாத, வாய் பேச முடியாத சிறுமி வசித்து வந்தார். கடந்த ஒன்றாம் தேதி சிறுமி காணாமல் போய்விட்டார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். மறுநாள் அருகே இருக்கும் அடர்ந்த காட்டுப் பகுதியில் படுகாயங்களுடன் சிறுமி மீட்கப்பட்டார். அந்த சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு இருந்ததால் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறுமியின் உடல் நலம் மோசமானதால் போபாலில் இருக்கும் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த ஏழாம் தேதி சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.