
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் குறுஞ்செய்தி ஒன்று மர்ம நபர்கள் மூலம் வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அதில் கூறியிருந்தது. இதை நம்பிய அவர் அந்த குறுஞ்செய்தியில் கூறியிருந்த நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். இதன் மூலம் பணமும் சம்பாதித்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர்கள் www.intecct.net இந்த இணையதளத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஒரு வங்கி கணக்கையும் அவருக்கு பகிர்ந்துள்ளனர். இதை நம்பி அவர் மொத்தம் 55,49,916 பணம் முதலீடு செய்துள்ளார். பின் சுதாரித்துக் கொண்ட அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சைபர் க்ரைம் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கை கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அந்த மர்மநபர்கள் குஜராத்தை சேர்ந்த சந்திரேஷ் பாய் ரவிஜ்பூ- வின் மகன் ஜேய் சவாலியா(24), அசோக் பாயின் மகன் மிலப் தக்கர்(22) என்பதும் தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் கடந்த ஜூலை 23ஆம் தேதி அவர்கள் இருவரையும் கைது செய்து, சூரத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதைத்தொடர்ந்து, டிரான்சிட் வாரண்ட் பெற்று, தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படனர். பின்னர் நேற்று (ஜூலை 26) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது. மேலும், இந்த குற்றவாளிகளைக் கண்டு பிடித்து குஜராத் வரை சென்று கைது செய்த, காவத்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.