இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி சந்தித்த தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இந்தூரில் நடைபெற்ற அந்த முக்கியமான போட்டியில் 289 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, ஒரு கட்டத்தில் வலுவாக விளையாடிக் கொண்டிருந்தது. மந்தனா 88 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் மூன்றாவது விக்கெட்டிற்கு 125 ரன்கள் கூட்டணி அமைத்து வெற்றிக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால் முக்கியமான தருணத்தில், மந்தனா தேவையற்ற ஒரு ஷாட் அடிக்க முயன்றதில் அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து, இந்திய அணியின் பேட்டிங் வரிசை விரைவில் சரிந்து, கடைசி 52 பந்துகளில் 55 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மந்தனா, “அந்த நேரத்தில் எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருக்க வேண்டியது. குறிப்பாக, நான் அடித்த அந்த ஷாட் தேவையற்றது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கான பொறுப்பு என்னுடையது.

எங்களுக்கு ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்திருக்க முடியும். ஆனால் நான் தவறான முடிவெடுத்தேன். இந்த தோல்விக்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன்” எனத் திறந்த மனதுடன் கூறினார். மேலும், “கிரிக்கெட்டில் எதுவும் எளிதில் வராது; இது எங்களுக்கு ஒரு பாடம். அடுத்த போட்டி நமக்கு அரையிறுதி போன்றது” என்றும் கூறினார்.

இந்த தோல்வியால் இந்தியா தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது. தற்போது புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணி, இன்னும் நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிராக ஆட வேண்டியுள்ளது.

மறுபுறம், இங்கிலாந்து இந்த வெற்றியால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு அடுத்ததாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக மாறியது. இந்தியா தனது அடுத்த முக்கியமான போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக வரும் 23 ஆம் தேதி நவி மும்பையில் ஆட உள்ளது