சென்னையில் குப்பையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்குத் தங்கச் சங்கிலியைப் பரிசாக வழங்கிக் கௌரவித்தார்.
சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் கடந்த 11-ஆம் தேதி மாநகராட்சித் தூய்மைப் பணியாளர் பத்மா பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பைகளுக்கு இடையே கிடந்த ஒரு கவரை அவர் எடுத்துப் பார்த்தபோது, அதில் சுமார் 45 சவரன் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏழ்மையான சூழலில் வசித்தபோதிலும், அந்த நகைகளைத் தனது உடைமையாக்க நினைக்காமல், உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பத்மாவின் இந்த நேர்மையான செயல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டி, அவருக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கௌரவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தத் தகவல் அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தூய்மைப் பணியாளர் பத்மாவைத் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்துச் சந்தித்தார். பத்மாவின் நேர்மையைக் கண்டு வியப்படைந்த ரஜினிகாந்த், அவருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
மேலும், அவரது உயரிய பண்பைப் பாராட்டும் விதமாக, பத்மாவுக்குத் தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசாக அணிவித்தார். தொடர்ந்து அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடி நலம் விசாரித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பத்மாவுக்கு நகையைப் பரிசளித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
