ஜம்மு காஷ்மீரின் ஷோபியன் பகுதியில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உள்ளூர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த அந்த அதிகாரி பேட்டிங் செய்யும் காட்சி பதிவானது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் படைவீரர்கள், மக்களுடன் நட்பு மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்தும் முயற்சியாக இதைப் பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பத்திரிகையாளர் பாத்திமா தர், “ஒரு காலத்தில் சாத்தியமில்லாத காட்சிகள் இன்று நிஜமாகிறது. காஷ்மீரின் இளைஞர்கள் ராணுவத்தின் பங்களிப்பை புரிந்து கொள்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பலரும் அந்த அதிகாரியை பாராட்டி, இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்பும் ராணுவம் மக்களுடன் இணைவதற்காக விளையாட்டு போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
