ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் 16 வயது மகளை, அர்ஜுன் என்ற இளைஞர் சமூக வலைதளங்கள் மூலம் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.

அந்தச் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொண்டு, அதை வைத்து அவரது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இந்தச் சதித் திட்டத்தில் அர்ஜுனுக்கு உடந்தையாக அவரது தாய் மீனா குமாரி, தம்பி மற்றும் உறவினர்கள் என ஒரு குடும்பமே செயல்பட்டுள்ளது.

“உன் மகள் வாழ்க்கை சீரழியாமல் இருக்க வேண்டும் என்றால் 25 லட்சம் ரூபாய் கொடு” என்று அந்தச் சிறுமியின் பெற்றோரையே மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில், இதேபோல சுமார் 25 சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி இதுவரை 45 லட்சம் ரூபாய் வரை இவர்கள் பறித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிள்ளைகள் யாரிடம் பழகுகிறார்கள் என்பதில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.